ஒரே நாடு ஒரே தேர்தல்; கதறல் சத்தம் அதிகமா இருக்கு...இங்கல்ல, அமெரிக்காவில்!

3


வாஷிங்டன்: இந்திய அரசியலில் விவாதிக்கப்படும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' இப்போது அமெரிக்காவிலும் வெகு தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நிலை வந்து விடும் என்று எச்சரித்துள்ளார், தொழிலதிபர் எலான் மஸ்க்.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த ஆட்சி காலத்தில், பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் எனப்படும் இந்த திட்டத்துக்கு செப்.,18ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்பட்டு, விரைவில் சட்டமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், மத்தியில் ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சியினர் வாதமாக உள்ளது.




கடைசி தேர்தல்




இந்நிலையில், வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினால், இது தான் அமெரிக்காவின் கடைசி தேர்தல் என உலக பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் கூறியுள்ளார். அதன்பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் தான் இருக்கும், அதுவும் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி தேர்தல் மட்டும் தான் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

'கமலா வென்றால் நாட்டில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இது அமெரிக்கர்கள் சிலருக்கு தான் தெரிகிறது. சட்ட விரோத குடியேற்றத்திற்கு கமலா ஹாரிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊக்கமளிக்கின்றனர்.
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கினால் அமெரிக்கா ஒரு கட்சி ஆட்சி முறைக்கு சென்றுவிடும். பின்னர் ஜனநாயகம் அழிந்துபோய்விடும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒலிக்கும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கருத்து, அமெரிக்காவிலும் வர வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

Advertisement