சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்

2

நாசிக்: சாவர்க்கர் குறித்து ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசியதற்காக, நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.


தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் நாசிக் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில், '' 2022ம் ஆண்டு நவ., மாதம் ராகுலின் பேச்சு மற்றும் அவரது பேட்டியை பார்த்தேன். ஹிந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் நற்பெயர் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேச்சு இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக்கூறி இருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி, '' தேசப்பற்றாளருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவரின் பேச்சு மற்றும் அறிக்கையை பார்க்கும் போது, அது அவதூறு ஏற்படுத்தும் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. வழக்கை நடத்துவதற்கான காரணங்கள் உள்ளன. வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் போது ராகுல் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும்''. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement