வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை; சென்னை மக்களே, உஷார்!

9

சென்னை: '' தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 112 சதவீதம் கூடுதலாக பெய்யும்,'' என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.



இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 30ல் துவங்கியது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்தது. தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் பருவமழை விலகலுக்கான தேதிகளை, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், இறுதி கட்டமாக வரும் 15ல் தென்மேற்கு பருவக்காற்று விலகும் என்று கூறப்படுகிறது. இந்த கணக்கீட்டின்படி, தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும். தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, ராயல்சீமா பகுதிகளில் இயல்பை விட அதிகமாக 112 சதவீதம் கூடுதலாக பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



அக்., 3வது வாரம்

இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை அக்., 3வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது. இது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், வட மாவட்டங்களில் அதிகமாகவும், தென் மாவட்டங்களில் குறைவாகவும் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு பருவமழை 18 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகவும், டெல்டா மாவட்டங்களில் குறைவாகவும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement