குற்றம் சாட்டப்படுவோர் வீடு இடிப்பு; விதிமுறை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் உறுதி

11

புதுடில்லி: குற்றம் சாட்டப்படுவோர் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நாடு முழுவதும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்கப் போவதாக கூறியுள்ளது.


வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை டில்லி ஷாஜகான்பூரில் துவங்கியது. பிறகு உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இதுபோன்று புல்டோசர் வாயிலாக வீடுகள் இடிக்கப்படுவது தொடர்ந்தது. இதை தடுத்து நிறுத்தும்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தவிர, பல தனிநபர்களும் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த செப்., 17 அன்று விசாரணைக்கு வந்த போது, புல்டோசர் நடவடிக்கையை தொடர அக்., 1 வரை தடை விதித்தனர்.



இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது: ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார் அல்லது குற்றவாளி என்பது மட்டும் இடிப்புக்கான காரணமாக கூற முடியாது. குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மட்டும் தனிப்பட்ட சட்டங்கள் இருக்க முடியாது. பொது சாலைகள், அரசு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானத்தை நாங்கள் பாதுகாக்க மாட்டோம்.

எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்திய மதசார்பற்ற நாடு. சுப்ரீம் கோர்ட் விதிக்கும் விதிமுறைகள், அனைத்து சமூகத்திற்கும் பொருந்துவதாக இருக்கும் எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement