திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நிறுத்தியது ஆந்திரா

7


விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ஆந்திர அரசு நிறுத்தி வைத்து உள்ளது.


ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மாநில அரசு அமைத்து உள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்து இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.


இது தொடர்பாக ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ் கூறியதாவது: திருப்பதி லட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எங்களது குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியதுடன், சிலரிடம் வாக்குமூலம் பெற்று ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement