பருவமழை மின் விபத்துகளை தடுக்க தரையில் இருந்து 3 அடி உயர்த்த திட்டம்

ராயபுரம், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மின்ட், ஸ்டான்லி நகர், வள்ளலார் நகர் பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில், மின் பெட்டிகள் அபாயகரமான நிலையில் தரைத்தளத்திலே அமைக்கப்பட்டு உள்ளன. கேபிள்கள் முழுதும், தரையில் பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்டு உள்ளது.

இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், உயிர் பலி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, மின் பெட்டிகளை சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, அபாயகரமான மின் பெட்டிகள் குறித்து, மாநகராட்சி, மின் வாரியம் சார்பில் கணக்கெடுப்பு நடந்தது.

இதில், 208 மின் பகிர்மான பெட்டிகள், பாதுகாப்பின்றி விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், தொடர் மின் வெட்டு பிரச்னையும் தொடர்கதையாக இருப்பதும் தெரிந்தது.

இதற்கு தீர்வு காணவும், மழைக்காலத்தை கருத்தில் வைத்தும், தரையில் இருந்து 3 அடி உயரத்திற்கு மின்பகிர்மான பெட்டிகளை உயர்த்தி அமைக்கும் பணிகளை, மின் வாரியம் துவக்கிஉள்ளது.

ராயபுரத்தில் இப்பணியை துவக்கி வைத்து, எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக மாற்றப்படாத மின்பகிர்மான பெட்டிகள் மாற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்பட உள்ளன. மழைக்காலத்தில் மின்பகிர்மான பெட்டி பாதிக்கப்படாமல் இருக்க, 3.5 அடி உயர்த்தி அமைக்கப்பட உள்ளன.

மின் வாரிய அதிகாரிகளின் துணையோடு, இப்பணிகள் 15 நாட்களில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.கே., நகரில் 81

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வ.உ.சி., நகர், திருவள்ளுவர் காலனி, கார்ப்பரேஷன் காலனி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 81 மின் பகிர்மான பெட்டிகள், அபாயகரமான நிலையில், மின் கேபிள்கள் பாதுகாப்பற்ற வகையில் தரையிலேயே கிடக்கின்றன.வடகிழக்கு பருவமழைக்கு முன், மின் பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் ஆய்வு மேற்கொண்டு, அபாயகரமான மின் பெட்டிகளை 3.5 உயரத்திற்கு மாற்றி அமைப்பதற்கான, பணிகளை துவக்கி வைத்தார்.

Advertisement