அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைப்பு

புதுச்சேரி : ராஜிவ்காந்தி, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் வசதி மூன்று மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அய்யப்பன் கூறியதாவது;

புதுச்சேரி, ராஜிவ்காந்தி, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. 14 ஆண்டுகளாக இயங்கி வரும் மருத்துவமனையில், பிரசவத்திற்கு வரும் பெண்கள் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாமல், அவதிப்பட்டு வந்தனர். பொது மக்கள் கோரிக்கையின் பேரில், முதல்வர் ரங்கசாமி, மருத்துவமனைக்கு அதிநவீன வசதி கொண்ட எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தார்.

அதையடுத்து, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வாங்கப்பட்டு, மருத்துவமனையில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.

மருத்துவமனையில், நடந்து வரும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கும் பணியை மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ரோசாரியா, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement