ரூ.4 கோடி மோசடி தம்பதி உட்பட மூவர் கைது

ஆவடி, கோவையைச் சேர்ந்தவர் தனிஷ் சேவியர் ஆனந்தன், 54. இவர், கடந்த மாதம் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

எனக்கு ஆவடி, காவல்சேரி கிராமத்தில், 8,325 சதுர அடி கொண்ட இடம் உள்ளது. இங்கு 7,000 சதுரடியில் மனைவி பெயரில், 'மெரினா பேக்' என்ற அட்டை நிறுவனம் வைக்க திட்டமிட்டு, இயந்திரங்களையும் வாங்கி வைத்திருந்தேன்.

இந்த நிலையில், என் நண்பரான நொளம்பூரைச் சேர்ந்த முத்துராஜ், 46, என்பவர், வேலையின்றி கஷ்டப்படுவதாக கூறினார். இதையடுத்து, கடந்த 2021ல் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களோடு நிறுவனத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன். ஆனால், முத்துராஜ் அவரது மனைவி முத்துலட்சுமி பெயரில் எம்.பி.பேக்ஸ் என்ற பெயரில் புது நிறுவனத்தை துவங்கி, அவரது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து, என் தளவாடங்களை அவர்கள் வாங்கியது போல் போலி ஆவணங்களையும் தயாரித்து, கடன் மற்றும் அரசு மானியமும் வாங்கியுள்ளனர். அந்த வகையில், 4 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

போலீசார் விசாரித்து முத்துராஜ், 46, அவரது மனைவி முத்துலட்சுமி, 40, மதுரவாயலைச் சேர்ந்த கார்த்திக், 39, ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement