ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: 'யூத்' டெஸ்டில் அசத்தல்

சென்னை: 'யூத்' டெஸ்டில் (19 வயது) அசத்திய இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

சென்னையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள், இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 293, இந்தியா 296 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 110/4 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஐடன் ஓ'கார்னர் (35), ஹைடன் ஷில்லர் (23*) ஓரளவு கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 214 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் முகமது ஏனான் 6 விக்கெட் சாய்த்தார்.

பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு நித்ய பாண்ட்யா (51), கார்த்திகேயா (35) நம்பிக்கை தந்தனர். அபாரமாக ஆடிய நிகில் குமார் அரைசதம் கடந்து கைகொடுத்தார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 214/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நிகில் (55) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஐடன் ஓ'கார்னர் 4, விஷ்வா ராம்குமார் 3 விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருதை நிகில் குமார் வென்றார். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், சென்னையில் வரும் அக். 7-10ல் நடக்கிறது.

Advertisement