பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்; மதுவிலக்கில் தி.மு.க.,வுக்கும் உடன்பாடு; மாநாடு நடத்திச்சொல்கிறார் திருமா!

14

உளுந்தூர்ப்பேட்டை: ''மதுவிலக்கில் தி.மு.க.,வுக்கும் உடன்பாடு உள்ளது ,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், வி.சி., கட்சி சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று நடந்தது. இந்த மாநாட்டில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

12 தீர்மானங்கள்





இந்த மாநாட்டில் திருமாவளவன் வாசித்த 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு


1. அரசியலமைப்பு சட்டம் 47 ல் கூறியபடி மதுவிலக்கை தேசிய கொள்கையாக வரையறுக்க சட்டம் இயற்ற வேண்டும்.

2. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

3. மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும்

4. மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்.

5. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த மதுபானக் கடைகளை மூடுவதற்கு கால அட்டவணையை அறிவிக்க வேண்டும்.

6. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

7. மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

8. குடிநோயாளிகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கும் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

9. மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.

10.டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்.

11. மதுவிலக்கு, சிறப்பு நிதி, நிதிப்பகிர்வு தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

12. மதுவிலக்கு பிரசாரத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அழியும்



இம்மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:திடீரென மதுவிலக்கு பற்றி விடுதலை சிறுத்தைகள் பேசவில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை. இது புத்தர் முன்வைத்த முழக்கம். உலகில் தோன்றிய எந்த மகானும் மதுவை ஆதரித்தது இல்லை. புத்தரோ, இயேசுவோ, இஸ்லாமோ அல்லது மகான்களோ மதுவை ஆதரிக்கவில்லை. கள் உண்ணாமை என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் இயற்றினார். மது அருந்தக்கூடாது என வள்ளலாரும், அய்யா வைகுண்டரும் வலியுறுத்தினார். இளம் வயதில் மது மற்றும் போதை பழக்கத்தால் மனித வளம் அழியும்.

சிக்கல்






மாநாடு தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் நான் விடுத்த அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசி மாநாட்டின் காரணத்தை சிதைத்துவிட்டனர். இந்த மாநாட்டின் நோக்கத்தை திசை திருப்பி விட்டார்கள். சிதைத்து விட்டார்கள்.

மது ஒழிப்பு என்பது இந்தியா முழுமைக்குமான பிரச்னை. கஞ்சா, ஓபியம், கொகைன், பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருட்கள் குக்கிராமங்களிலும் கிடைக்கிறது. தி.மு.க.,வுக்கும் மதுவிலக்கில் உடன்பாடு உள்ளது. கொள்கை அளவில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. நடைமுறை சிக்கலால் அதனை மூட முடியவில்லை.


தேசிய மது கொள்கையை உருவாக்கி மதுக்கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உறுதியாக இருந்தார். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என கருணாநிதி கூறினார். எம்.ஜி.ஆர்., காலத்தில் மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன. ஜெயலலிதா காலத்தில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கி விற்பனை செய்யப்பட்டது. இதை பற்றி பேசு மறுக்கிறார்கள்.

காந்தியடிகளின் பல கொள்கைகளில் முரண்பட்டாலும் மதுவிலக்கு கொள்கையில் உடன்படுகிறோம். மதுக்கடைகளை மூட முடியாது என முதல்வர் ஸ்டாலின் சொல்லவில்லை. நிர்வாக சிக்கல் உள்ளது என்று தான் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் குடிக்கவில்லை. ஹிந்துக்கள் அதிகம் பேர் மது குடிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் குடிக்கலாம். பிரதமர் மோடியும், அமித்ஷாவும், ஹிந்துக்களை பாதுகாக்க முன்வருவார்களா? இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement