சர்பராஸ் கான் இரட்டை சதம்: மும்பை அணி ரன் குவிப்பு

லக்னோ: இரானி கோப்பையில் மும்பை அணியின் சர்பராஸ் கான் இரட்டை சதம் விளாசினார்.

உ.பி.,யின் லக்னோவில், இரானி கோப்பை கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதில் மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 237/4 ரன் எடுத்திருந்தது. ரகானே (86), சர்பராஸ் கான் (54) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஐந்தாவது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்த போது கேப்டன் ரகானே (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷாம்ஸ் முலானி (5) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சர்பராஸ் கான், முதல் தர போட்டியில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். தனுஷ் (64) அரைசதம் கடந்தார். ஷர்துல் தாகூர் (36) ஆறுதல் தந்தார். தொடர்ந்து அசத்திய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடிக்க, மும்பை அணி 500 ரன்னை கடந்தது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 536 ரன் குவித்திருந்தது. சர்பராஸ் (221 ரன், 276 பந்து, 4 சிக்சர், 25 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் முகேஷ் குமார் 4, யாஷ் தயால், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.




முதல் மும்பை வீரர்


பேட்டிங்கில் அசத்திய சர்பராஸ் கான், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் விளாசிய முதல் மும்பை அணி வீரரானார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 5வது வீரர் என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே வாசிம் ஜாபர் (விதர்பா), ரவி சாஸ்திரி, பிரவீன் ஆம்ரே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ('ரெஸ்ட் ஆப் இந்தியா') இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்திருந்தனர்.

Advertisement