கல்வி செலவை ஏற்றது உ.பி., அரசு: தலித் மாணவர் 'ஹேப்பி'

லக்னோ : தன்பாத் ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிப்புக்கான இடத்தை போராடி பெற்ற உத்தர பிரதேச தலித் இளைஞர் அதுல் குமாரின் முழு கல்விக் கட்டணத்தை ஏற்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள திடோரா கிராமத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார், 18. இந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ., தேர்வில் தகுதி பெற்றதை அடுத்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவருக்கு, ஜார்க்கண்டின் தன்பாத் ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிப்பில் சேர இடம் கிடைத்தது.

அதற்கான துவக்க கட்டணம் 17,500 ரூபாயை உரிய கால அவகாசத்திற்குள் அதுல் குமாரால் செலுத்த முடியவில்லை. அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.

மீண்டும் வாய்ப்பு வழங்கக் கோரி தன்பாத் ஐ.ஐ.டி., தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், ஜார்க்கண்ட் சட்ட உதவி ஆணையம் ஆகிய இடங்களில் அதுல் முறையிட்டார்.

இந்த ஆண்டுக்கான ஐ.ஐ.டி., ஒருங்கிணைந்த சேர்க்கையை சென்னை ஐ.ஐ.டி., நடத்தியதால், அங்கும் இது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் அதுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தொந்தரவு அளிக்காத வகையில், சூப்பர் நியூமரரி இருக்கைபடி, அதுலுக்கு இடம் ஒதுக்கலாம்' என உத்தரவிட்டு இருந்தது.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, ஐ.ஐ.டி.,யில் சேரும் அதுல் குமாரின் முழு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணவரின் குடும்பத்தினருடனும், தன்பாத் ஐ.ஐ.டி., நிர்வாகத்துடனும், மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஆசிம் அருண் பேசினார்.

இதையடுத்து, அதுல் குமார் ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான கட்டணம் மட்டுமின்றி, நான்கு ஆண்டுகள் படிப்பை முடிக்கும் வரை, 'ஸ்காலர்ஷிப்' அடிப்படையில் முழு கட்டணத்தை செலுத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement