ஹிஸ்புல்லாக்கள் தாக்குதலில் இஸ்ரேல் வீர்கள் 8 பேர் உயிரிழப்பு : அவசரமாக கூடுகிறது ஐ.நா. சபை


டெஹ்ரான்: '' தெற்கு லெபனானில் ராணுவ நடவடிக்கையின் போது ஹிஸ்புல்லா தாக்குதலில் 8 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்,'' என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. போர் பதற்றத்தையெடுத்து அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை.


ஹிஸ்புல்லா பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீது, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியது. அதில் பலர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல்



இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து, ஏவுகளைகள் மற்றும் ராக்கெட்களை வீசி ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலிய வீரர்கள் மரணம்



இதனிடையே, லெபனான் எல்லையில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஹிஸ்புல்லா தாக்குதலில் மேலும் 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. அவர்களில் 3 ராணுவ கேப்டன்களும் அடக்கம். இறந்தவர்களின் ரத்தத்தை கடவுள் ஆசிர்வதிப்பார். ஈரான் நம்மை அழிக்க முயன்றது. கடவுளின் உதவியால் அவர்களை வெல்வோம் எனக்கூறியுள்ளது.


இதனிடையே, தெற்கு லெபனானுக்கு இஸ்ரேல் ராணுவம் கூடுதல் படைகளை அனுப்பி உள்ளது. அப்பகுதியில் கிராமங்களில் தங்கி உள்ள மக்களை வெளியேறும்படி கூறியுள்ள ராணுவம், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கட்டமைப்புகளை அழித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

ஈரான் மிரட்டல்



இந்நிலையில் ஈரான் உளவுத்துறையானது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ மற்றும் பாதுகாப்பு படை தலைவர்களை பயங்கரவாதிகள் என அறிவித்து உள்ளதுடன் அவர்களை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்து உள்ளது.

லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், முழுஅளவிளான போராக மாற்ற விரும்வில்லை என ஈரான் கூறியுள்ளது.

நெதன்யாஹூ ஆலோசனை



ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பு படை வீரர்களுடன் நெதன்யாஹூ அவசர ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு, தாக்குதல் துவங்கும் எனக்கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரான் வழியை பின்பற்றி, இஸ்ரேல் மீது ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

சீனா கவலை



மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டு உள்ள பதற்றம் கவலை அளிப்பதாக சீனா தெரிவித்து உள்ளது.

லெபனான் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதான மீறல்களை சீனா கடுமையாக எதிர்க்கிறது.மத்திய கிழக்கில் பகைமையையும் பதற்றங்களையும் அதிகரிக்கும் எந்தவொரு நகர்வுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம் என அந்நாடு கூறியுள்ளது.

ரஷ்யா குற்றச்சாட்டு



இஸ்ரேல் தாக்குதல் நடத்திய லெபனானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய போவதாக அறிவித்து உள்ள ரஷ்யா, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு அமெரிக்காவே காரணம் என குற்றம்சாட்டி உள்ளது.




ஐ.நா. பாதுகாப்பு சபை கூடுகிறது




இஸ்ரேல், ஈரான் போர் தீவிரமடைந்து வருவதையெடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உறுப்பு நாடுகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியு்ளளது.

ஜி7- நாடுகள் அவசர ஆலோசனை



இதற்கிடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால் ஜி07 நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஜி-7 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார.

Advertisement