தேசியக்கொடிக்கு இவ்வளவுதானா மரியாதை; சித்தராமையா செயலால் சர்ச்சை!

2

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஷூவை தொண்டர் ஒருவர் கைகளில் தேசியக் கொடியுடன் அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4000 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்தராமையா மனைவி பார்வதியின் பெயரில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது அவருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், அடுத்த சர்ச்சையில் சித்தராமையா சிக்கி உள்ளார். பெங்களூரு காந்தி மைதானத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு சித்தராமையா மரியாதை செலுத்த வந்தார். அப்போது, அங்கிருந்த கையில் தேசிய கொடியுடன் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், அப்படியே சித்தராமையாவின் ஷூவை அகற்ற உதவினார். அப்போதும் தேசியக்கொடியை யாரிடமும் கொடுக்கவில்லை. சித்தராமையாவும் எதுவும் சொல்லவில்லை. அருகில் இருந்த ஒருவர், தேசியக்கொடியை வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement