அங்கன்வாடி கட்டட பணி ஜவ்வு ரூ.13 லட்சம் வரிப்பணம் வீண்

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்ததால், 2012- - 13ம் ஆண்டு, 1.53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.

தற்போது, 35 சிறுவர் - சிறுமியர் அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டடம், தற்போது சிதிலமடைந்து, கட்டடத்தின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளது.

இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, சுவர்களில் மழைநீர் வழிகிறது. பாதுகாப்பற்ற நிலையில் கட்டடம் உள்ளதால், தற்போது ஊராட்சியில் உள்ள சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட, 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியது. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டிய கட்டட பணி, ஓராண்டை கடந்தும் நிறைவு பெறவில்லை. தற்போது, கட்டட பணி கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அங்கன்வாடி மைய கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement