சிட்கோ தொழிற்சாலை வளாகத்தில் தீ ஆலத்துார் கிராமத்தில் பரபரப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், சித்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மருந்து தயாரித்த பின், அதிலிருந்து வெறியேற்றப்படும் குப்பை கழிவுகள், வளாக பின்புறத்தில் அவ்வப்போது குவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, தொழிற்ச்சாலை பின்புற வளாகத்தில் குவிந்திருந்த குப்பை கழிவுகளில், திடீரென தீப்பிடித்து, காற்றின் வேகத்தால் மளமளவென பரவியது.

தொடர்ந்து, திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவில் வந்து, ஒரு மணி நேரம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சித்த மருத்துவ தொழிற்சாலையை சுற்றி, தனியார் கெமிக்கல் தொழிற்சாலைகள் உள்ளன. தீயை உடனடியாக அணைத்ததால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால், சிட்கோ வளாகம் உள்ளிட்ட பகுதி முழுதும், புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து, திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement