'நொய்யல் வனம்' திட்டம்

திருப்பூர்: காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில், மூலனுார் மற்றும் குட்டப்பாளையத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.

குட்டப்பாளையம், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் சார்பில், நொய்யல் ஆற்றோரம் மரம் வளர்க்கும், 'நொய்யல் வனம்' திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தமிழக அரசின் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் சிவசேனாபதி சாமிநாதன் முன்னிலை வகித்தார். அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார்.

வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், குட்டப்பாளையம் சாமிநாதன் கல்வி மற்றும் அருஞ்செயல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அரவிந்த் நல்லதம்பி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் அசோக்குமார், திரைப்பட இயக்குனர் ஹமிதா சமீம், ரோஜா முத்தையா, ஆய்வு நுாலக இயக்குனர் சுந்தர் கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.

ஆறுமுகம் அறக்கட்டளை மற்றும் அனிதா டெக்ஸ்காட் இந்தியா நிறுவனம் மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில், மூலனுாரை சுற்றியுள்ள, குளக்கரைகளில், 25 ஆயிரம் மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்ட துவக்க விழா, நேற்று கருடன்கோட்டை பகுதியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு அனிதா டெக்ஸ்காட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் முன்னிலை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். 35வது பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் வேணாவுடையர், மூலனுார் ஒன்றிய குழு துணை தலைவர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Advertisement