மகாளய அமாவாசை வழிபாடு; கோவில்களில் பக்தர் திரண்டனர்

திருப்பூர் : மகாளயபட்ச அமாவாசையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், பக்தர்கள் அன்னதானம் செய்து வழிபட்டனர்.

கடந்த பவுர்ணமி நாளில் துவங்கி, 15 நாட்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும், மகாளயபட்ச விரத வழிபாடு நடந்து வந்தது.

அமாவாசையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல், பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தீபம் ஏற்றி வைத்தும், மலர்மாலைகள் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் சார்பில், கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை முதல் மதிய நேரத்திலும்,மாலை முதல் இரவுவரையிலும் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.

முன்னோருக்கு தர்ப்பணம்



அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசி, மங்கலம் ரோட்டில், குருக்ருபா சேவா டிரஸ்ட் சார்பில், சுப்பைய சுவாமி திருமடம், திருப்பூர் பார்க் ரோடு ராகவேந்திரா கோவில் உட்பட, பல்வேறு இடங்களில், நேற்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குடும்பத்தை சேர்ந்த, மறைந்த முன்னோர்களுக்காக, ஆண்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

4 ஆயிரம் பேருக்குஅன்னதானம்



அகத்தியர் எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர், காலை, 10:30 முதல், மதியம் 1:30 மணி வரை, அன்னதானம் வழங்கினர். மொத்தம், 4 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

மகா சோடஷி அம்மன்



மகாளயபட்ச அமாவாசையை ஒட்டி, திருப்பூர் தொழில்நலன் வேண்டி, கே.செட்டிபாளையத்தில் சிறப்பு யாகபூஜைகள் நடந்தன. அகத்தியர் மற்றும் சோடஷி அம்மன் கோவிலில், சிறப்பு யாகபூஜைகளும், அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகளும் நடந்தன. முன்னதாக, திருப்பூர் தொழில்நலன் வேண்டி, பித்ரு கண சூட்சம யாகம், மகா மிருத்யுஞ்சய மகா யாகம், லட்சுமி குபேர வசிய ேஹாமம், ஸ்ரீவித்யா பராபட்டாரிகா மகா சோடஷி யாகம் ஆகியன நடந்தது.

Advertisement