மதுரை நகருக்கு வரப்பிரசாதமான வைகை வடகரை ரோடு 8 கி.மீ., தாங்கு சுவர் அமைக்கும் பணி துவக்கம்

மதுரை: வைகை வடகரையில் மதுரைக்கு வரப்பிரசாதமாக அமைய உள்ள 8 கி.மீ., ரோடுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கிவிட்டன.

மதுரையின் போக்குவரத்து நெரிசலைதவிர்க்க வைகை நதிமீது ஏராளமான பாலங்கள் அமைக்கப்பட்டன. விரிவடையும் நகரைப் பொறுத்தவரை, மத்திய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வைகை கரையோரம் இருபுறமும் ரோடுகள் அமைக்கப்பட்டன.

தென்பகுதியில் திண்டுக்கல் ரோட்டில் காமராஜர் பாலம் முதல் விரகனுார் ரிங்ரோடு வரை 10 கி.மீ., ரோடு அமைந்துள்ளது. இடையே ரயில்பாதையில் 400 மீ., தடைபட்டுள்ளது. வடபகுதியில் காமராஜர் பாலம் முதல் அண்ணாநகரை தாண்டி ரிங்ரோடு வரை அமைக்கப்பட்டுஉள்ளது. இதில் குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் வரை 800 மீ., இடப்பிரச்னையால் தடைபட்டுள்ளது.

தற்போது வைகையின் வடகரையில் காமராஜர் பாலம் முதல் சமயநல்லுார் 4 வழிச்சாலை வரை 8 கி.மீ., ரோடு ரூ.176 கோடியில் அமைய உள்ளது. பாத்திமா கல்லுாரி முதல் தற்போதுள்ள ரோட்டுக்கு இணையாக இந்த ரோடு இருவழிப்பாதையாக அமையும். இதற்காக 4 வழிச்சாலையில் இருந்து வைகை ஆற்றுக்குள் தாங்கு சுவர் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

12 மீ., அகலத்தில் அமையும் இந்த ரோட்டில் வாகனங்கள், டூவீலர்கள் செல்லும் அளவில் 10.5 மீ., அகலத்திலும், 1.5 மீ., அகலத்தில் நடைபாதையும் உண்டு. இந்த ரோட்டில் 2 பாலங்கள், 11 சிறுபாலங்கள் அமைய உள்ளன. சில இடங்களைத் தவிர முழுக்க முழுக்க அரசு நிலமே பயன்படுத்தப்படுகிறது.

இப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப்பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சீத்தாராமன், உதவிப்பொறியாளர்கள் பாலாஜி, சார்லஸ் ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறுகையில், ''மதுரையின் வரப்பிரசாதமாக இந்த ரோட்டை கூறலாம். தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் எந்த வாகனமும் மதுரையின் மத்திய பகுதியில் நெருக்கடி இன்றி நகரை கடந்து விடலாம். 2026 பிப்ரவரிக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நகருக்குள் நெரிசலை தவிர்க்க அமைச்சர், தலைமைப் பொறியாளர் பணிகளை கேட்டறிந்து உரிய காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்'' என்றனர்.

Advertisement