கடன் தள்ளுபடிக்கு கணக்கு கேட்கிறார் ராகுல்; ஹரியானா பிரசாரத்தில் அனல்

20

நூவு: '' விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பெற்ற கடனில் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது, '' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.


ஹரியானாவின் நூவு பகுதியில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஹரியானா இளைஞர்கள் வேலை கிடைக்காத காரணத்தினதினால் கடன் வாங்கி அமெரிக்கா செல்கின்றனர். இந்த மாநிலத்தை பா.ஜ., அரசு சீரழித்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை பட்டியலில் எப்படி ஹரியானாவை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்தோம் என்பதை பற்றி பிரதமர் மோடி விளக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கான அரசை பிரதமர் மோடி நடத்துகிறார். 20 -25 பேரின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கடன் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி கூற வேண்டும்.


பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். அதனை நாங்கள் அகற்றிவிட்டோம். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரசுக்கு ஓட்டளிப்பதன் மூலம் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement