காபி பிரியர்களுக்கு ட்ரீட்: மூன்று நகரங்களில் சர்வதேச மெகா காபி திருவிழா!

புதுடில்லி: வரும் அக்டோபர் மாதம் டில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் சர்வதேச காபி திருவிழா நடைபெற உள்ளது என ஐ.ஐ.சி.எப்., தெரிவித்துள்ளது.


கடந்த 2023ம் ஆண்டு, பெங்களூருவில் உலக காபி மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சி, இந்திய காபி போர்டு பங்களிப்புடன் நடந்தது. இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் இருந்து 2,400 பிரதிநிதிகள், 117 சிறப்பு பேச்சாளர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 2024 இந்திய சர்வதேச மெகா காபி திருவிழா, இம்மாதம் (அக்டோபர்) டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது.


இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, டில்லியில் உள்ள பசிபிக் மால், தாகூர் பூங்காவில், அக். 4 முதல் 6ம் தேதி வரை இந்திய, சர்வதேச மெகா காபி திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவின் 2வது நிகழ்ச்சியாக ,மும்பை, குர்லாவில் உள்ள போனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில், அக்.11 முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

3வது நிகழ்ச்சி, அக்.28 முதல் 30ம் தேதி வரை, பெங்களூரு டோம்லுாரில் உள்ள பெங்களூரு சர்வதேச மையத்தில் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், தேசிய காபி சாம்பியன் யார் என்பதை அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பர்.


இது குறித்து ஸ்பெஷாலிட்டி காபி அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் பூர்ணேஷ் கூறியதாவது:


இந்தியாவிற்கு மிகப்பெரிய காபி திருவிழாவைக் கொண்டு வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது. இந்தியா, அதிகமான காபி குடிப்பவர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இது நமக்கு மிக முக்கியமான சந்தையாகும். மேலும் காபி கலாசாரம், எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் இந்த மூன்று முன்னணி நகரங்களில் வசிக்கும் ஆர்வலர்கள் இந்த விழாவை பயன்படுத்தி கொள்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விழாவானது, ஆலேசானைகள் மற்றும் படைப்பு திறன்களை பரிமாறிக்கொள்ளும் இடமாக இருக்கட்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement