பதவி உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை: அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காததை கண்டித்து சிவகங்கை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும், குறுவள மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர், உதவியாளர்களுக்கு 2024 ஜன.,ல் பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும்.

பல கட்ட போராட்டம் நடத்தியும், இது வரை பதவி உயர்வு வழங்காததால், மாவட்ட அளவில் 260 குறுவள மைய அங்கன்வாடி பணியாளர், 26 உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து நேற்று மாலை 4:30 மணி முதல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சிவகங்கை குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

சங்க மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். செயலாளர் பாக்கியமேரி முன்னிலை வகித்தார். மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் போராட்ட விளக்க உரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, கலைச்செல்வி, ராதா பங்கேற்றனர். நேற்று இரவிலும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் பாக்கியமேரி கூறியதாவது:

நேற்று துவங்கிய உள்ளிருப்பு போராட்டம்,பதவி உயர்வுக்கான உத்தரவு வரும் வரை தொடரும். எங்கள் போராட்டத்திற்கு பின் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அக்.,1ல் பதவி உயர்வு வழங்கிவிட்டார். அதே போன்று சிவகங்கை கலெக்டரும் எங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவை வழங்க வேண்டும், என்றார்.

Advertisement