பள்ளி மாணவர்கள் வளர்த்த மரங்களால் கிராமத்தில் 'குளு குளு'

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவர்கள் நட்டு வளர்த்த மரங்களால் இன்று கிராமத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது.

ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தக்கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது சித்தையகவுண்டன்பட்டி. விவசாயம் கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக உள்ள இக் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மெயின் ரோட்டில் இருந்து கிராமம் செல்லும் பாதையில் ரோட்டின் இருபுறமும் வளர்ந்துள்ள மரங்கள் இயற்கை பந்தல் அமைத்தது போல் உள்ளது. விவசாய வேலை முடித்து வரும் மக்கள் இப்பகுதியில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். பசுமையான வளர்ந்துள்ள மரங்கள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் மாணவர்கள் முயற்சியால் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏத்தக்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து கிராமத்திற்கு செல்லும் பாதையில் ரோட்டின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கை வகை மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளை நட்டதுடன் தங்கள் கடமை முடிந்தது என்று இல்லாமல் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்கள் மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்தனர். மாணவர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்த்த மரங்கள் இன்று ஓங்கி உயர்ந்து கிராமத்தின் நுழைவுப் பகுதியில் நிழல் தரும் மரங்களாக வளர்ந்துள்ளன என்றனர்.

Advertisement