விஜய்யின் அறிக்கையில் வெளிப்படும் கவலையும் மற்ற கட்சிகளுக்கு பதிலும்!

16


சென்னை: கட்சி மாநாடுக்கு முன்பு முதன்முதலாக தொண்டர்களுக்கு கடிதமாக எழுதியுள்ள நடிகர் விஜய், அதில் சில விஷயங்களை மற்ற கட்சிகளுக்கு பதில் அளிப்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க., கட்சியின் முதல் மாநாடு அக்.,27ல் நடக்க உள்ளது. மாநாடுக்கு அனுமதி அளிக்கும் முன்பு போலீசார் வரிசையாக ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்தனர். அதற்கெல்லாம் ஒரு வழியாக பதில் சொன்னார் விஜய். அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனால், மற்ற கட்சி தலைவர்கள் சும்மா இருக்கவில்லை.

‛‛மாநாடு நடத்துவது சாதாரணமான விஷயமா; மாநாடு நடத்தி அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லாத கட்சி; தொடர்ந்து அரசியல் களத்தில் நிற்க முடியுமா; நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்; கட்சி ஆரம்பித்து சூடுபட்டுக்கொண்ட நடிகர்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டோம்...'' - இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன.

இந்நிலையில் மாநாடுக்கான கால்கோள் விழா நடந்து முடிந்தது. இதை முன்னிட்டு கட்சியினருக்கு அறிக்கையை ஒரு கடிதம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார் விஜய். அதில் அவர், எம்ஜிஆரின் ''ரத்தத்தின் ரத்தமே'', கருணாநிதியின் ‛‛என் உயிரினும் மேலான உடன்பிறப்பே'' ஸ்டைலில் ‛‛என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே'' என்று தனக்கென புது ஸ்டைலில் தொடங்கி உள்ளார். இது அவரது ‛‛பிராண்ட்'' ஆகவும் மாறக் கூடும்.

மாநாட்டுக்கு வரும் தனது ரசிகர்கள், போதையில் வந்து விடக் கூடாது; வரும் வழியில் ஏதும் பிரச்னை செய்து விடக்கூடாது என அவர் அஞ்சுகிறார். அதனாலேயே இந்த கடிதத்தில், ‛‛பொறுப்பான மனிதனாக இருக்க வேண்டும். ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்'' என்றெல்லாம் திரும்ப திரும்ப கூறுகிறார். ரசிகர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கினால், ஆரம்பத்திலேயே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும்; போலீசாரால் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பதே அவரது அச்சம்.

‛‛இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா; மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா; களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா'' என நினைக்கிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போது தான் அவர்களுக்குப் புரியும்'' என்று குறிப்பிடும் விஜய், சந்தேகம் எழுப்பும் மற்ற கட்சி தலைவர்களுக்கு இதையே பதிலாக தருகிறார்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத திமுகவினர் சிலர் கூறும்போது, ‛‛உண்மையில் இவரது ரசிகர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். இவர் தொடர்ந்து எவ்வளவு நாள் அரசியல் செய்வார் என்பதெல்லாம் இனிமேல் தானே தெரியப் போகிறது. பார்ப்போம்'' என்கின்றனர்.

Advertisement