டைம் மெஷின் மூலம் இளமை தோற்றம்; ஆசை காட்டி ரூ.35 கோடி மோசடி செய்த 'பலே' தம்பதி

4

கான்பூர்: வயதை குறைத்து இளம் தோற்றத்தை கொண்டு வருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ.35 கோடி மோசடி செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

கான்பூரின் கித்வாய் நகரில் 'ரிவிவல் வேர்ல்டு' எனும் பெயரில் தெரபி சென்டரை ஒரு தம்பதி நடத்தி வந்துள்ளது. இவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்களிடம், கான்பூரில் மாசுபாடு அதிகரித்திருப்பதால், வயது முதிர்வு அதிகரித்து வருவதாகவும், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைம் மெஷின் மூலம் ஆக்ஸிஜன் தெரபியை செய்தால், இளமை தோற்றத்தை பெற முடியும் என்று கூறி மூளைச்சலவை செய்துள்ளனர்.

மேலும், ஒரு முறை ஆக்ஸிஜன் தெரபி செய்வதற்கு ரூ.90 ஆயிரம் கட்டணமாகவும், நண்பர்களை பரிந்துரை செய்தால் ஆபர் வழங்குவதாகவும் கவர்ச்சி விளம்பரங்களை அளித்துள்ளனர்.

இதனை நம்பி ஏராளமானோர் சிகிச்சை பெற்றதுடன், பலரையும் அழைத்து வந்துள்ளனர். ஆனால், நினைத்ததைப் போல எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சிலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த தம்பதி தலைமறைவாகி விட்டனர்.

இதுவரையில் 20க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.35 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அவர்களை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் போலீசார், வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலைய அதிகாரிகளையும் உஷாராக்கியுள்ளனர்.

Advertisement