கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் போடலாமே? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

1

மதுரை: 'கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? ' என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தமிழகத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பா.ம.க,, தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், மாணவர்கள் குட்கா பயன்படுத்துவது குறித்து நீதிபதி பரத சக்ரவர்த்தி தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார்.


அப்போது தமிழக அரசு தரப்பில்,'குட்கா பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்து விற்கின்றனர். குட்கா பொருட்கள் விற்பனை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்' என வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட, ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி பரத சக்வரத்தி சரமாரி கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:

* குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.


* கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?


* கூல் லிப், குட்கா பொருட்களை நிரந்தரமாக தடை செய்வது குறித்து வழிகாட்டுதல் பிறப்பிக்கப்படும்.


* கூல் லிப், குட்கா பயன்பாடுகளில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும். கூலி லிப், குட்கா பொருட்கள் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.


* குட்கா பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முற்றிலுமே தடை செய்ய முடியும்.


* குட்காவை நிரந்தரமாக தடை செய்வது குறித்து அரசுகளுக்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். தீர்ப்புக்காக வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement