மும்பை அணி முன்னிலை: பிரித்வி ஷா அரைசதம் விளாசல்

லக்னோ: இரானி கோப்பையில் மும்பை அணியின் பிரித்வி ஷா அரைசதம் கடந்து கைகொடுத்தார்.

உ.பி.,யின் லக்னோவில், இரானி கோப்பை கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதில் மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன் குவித்தது. மூன்றாம் நாள் முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி முதல் இன்னிங்சில் 289/4 ரன் எடுத்திருந்தது. அபிமன்யு (151), ஜுரெல் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்த போது ஷாம்ஸ் முலானி பந்தில் ஜுரெல் (93) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (191), இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மானவ் சுதர் (6), யாஷ் தயால் (6), பிரசித் கிருஷ்ணா (0), முகேஷ் குமார் (0) ஏமாற்றினர். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மும்பை அணி சார்பில் தனுஷ், முலானி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பிரித்வி அபாரம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய மும்பை அணிக்கு ஆயுஷ் (14), ஹர்திக் தாமோர் (7), கேப்டன் ரகானே (9), ஸ்ரேயாஸ் (8) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய பிரித்வி ஷா (76) அரைசதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 153/6 ரன் எடுத்து, 274 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சர்பராஸ் கான் (9), தனுஷ் (20) அவுட்டாகாமல் இருந்தனர். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் சரண்ஷ் ஜெயின் 4, மானவ் சுதர் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement