வைகை நதியை சுத்தப்படுத்துவதாக கூறி மதுரை ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல்

மதுரை:மதுரை ஆதீன மடத்திற்கு ஒரு அமைப்பினர் நன்கொடை கேட்டு வந்தனர். ஆதீனத்திடம், 'வைகை நதியை, 20 நாட்களுக்கு சுத்தப்படுத்த உள்ளோம்.

அதற்கு ஆட்கள், இயந்திர செலவு என ஒரு நாளைக்கு, 15,000 ரூபாய் செலவாகும். அதை கணக்கிட்டு, 20 நாட்களுக்குரிய தொகையான, 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக தரவேண்டும்' என்றனர்.

அதிர்ச்சியடைந்த ஆதீனம், 'நதியை சுத்தப்படுத்துவது அரசின் கடமை. அதை மாவட்ட நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு தனி அமைப்பால் சுத்தப்படுத்துவது முடியாத காரியம்' என கூற, அவருடன் அந்த அமைப்பினர் மிரட்டல் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறியதாவது:

வைகையை சுத்தப்படுத்த ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் கேட்டனர். அவர்கள் என்னை பார்க்க வந்த முறையே தவறு. அவர்கள் நடவடிக்கை சந்தேகமாக இருந்தது.

இவ்விஷயத்தில் கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.

என்னை மிரட்டியவர்கள் தொடர்பாக புகார் கொடுக்க விரும்பவில்லை. ஏச்சு பேச்சு எல்லாம் எவ்வளவோ வாங்கி விட்டேன்.

இந்த மிரட்டல் எல்லாம் துாசி. என்னை அரிவாளால் வெட்ட வந்துள்ளனர். இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல. போலீசில் புகார் அளிக்க போகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் புகார் கொடுக்காத நிலையிலும், அவரை மிரட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement