மலைபபாதை தடுப்புச்சுவர் சேதம் சீரமைக்க அதிகாரிகள் தயக்கம்

போடி: குரங்கணி -- டாப் ஸ்டேஷன் ரோட்டில் கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளதால் வளைவான பாதையில் வாகனம் திரும்பும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கடைக்கோடி கிராமமாக தமிழக, கேரள எல்லை பகுதியில் டாப் ஸ்டேஷன் அமைந்து உள்ளது. போடியில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள குரங்கணி வரை ரோடு வசதி உள்ளது. அங்கு இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள டாப் ஸ்டேஷனுக்கு ரோடு வசதி இல்லை. ரோடு அமைக்க தமிழக, கேரளா மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரோடு அமைப்பதன் மூலம் டாப்ஸ்டேஷன் மட்டுமின்றி தமிழக, கேரளா சுற்றுலா பயணிகளும் பயன் அடைவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குரங்கணியில் இருந்து சாம்பலாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி வரை தார் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின் ரோடு வசதி இல்லை.

இந்நிலையில் குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரை பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டன. பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தடுப்புச் சுவரை சமூக விரோதிகள் சேதம் ஏற்படுத்தி வருவதோடு, அதில் இருக்கும் கற்களை திருடி வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். குரங்குகணி - டாப் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் சாம்பலாறு வரை ஜீப், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. வளைவான பாதையில் திரும்பும் போது சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் முன் சேதம் அடைந்த தடுப்புச் சுவரை சீரமைத்திடவும், வளைவான பாதையில் எச்சரிக்கை பலகை அமைத்திட போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement