கருணை ஓய்வூதியம் கேட்டு 'பேக்சியா' ஆர்ப்பாட்டம்

சேலம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அசோசியேஷன்(பேக்சியா) சார்பில், ஓய்வு பெற்ற பணியாளருக்கு, 5,000 ரூபாய் கருணை ஓய்வூதியம், இறந்த பணியாளர் குடும்பத்துக்கு, 2,500 ரூபாய் வழங்குதல் உள்பட, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் சேலத்தில் நேற்று நடந்தது.


அதில் பொதுச்செயலர் திருநாவு குமரேசன் தலைமை வகித்து பேசியதாவது:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், நகர கடன் சங்க பணியாளர்களுக்கு புது ஊதிய நிர்ணயக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வெறும், 5 சதவீத ஊதிய உயர்வு மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு, பயிர் கடன், நகை கடன் ஆகியவை தள்ளுபடி செய்தது போக, மீதமுள்ள முதலீட்டு நிதி அடிப்படையில் ஊதிய உயர்வு, எந்த சங்கமும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பொது பணி நிலைத்திறன் பெயரில் சங்க செயலர்களை இடமாற்றம் செய்வது, தற்போது பணமாக்கப்பட்டு வருவதால் அதை நிறுத்திவிட்டு, அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியராக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு நெருக்கடி தரும்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

மாநில தலைவர் பழனிசாமி, பொருளாளர் அன்புக்கரசு, துணைத்தலைவர்கள் பழனிசாமி, செந்தில்முருகன், சேகர், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement