இடுக்கியில் பயன்பாட்டுக்கு வந்த முதல் சுங்கச்சாவடி

மூணாறு: இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் குருசடி பகுதியில் அமைக்கப்பட்ட முதல் சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே 42 கி.மீ., தூரம் ரோடு இருவழிச் சாலையாக ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டது. அந்த ரோட்டை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி ஜன.5ல் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.

முதல் சுங்கச்சாவடி: தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டத்தில் முதன் முதலாக லாக்காடு எஸ்டேட் குருசடி பகுதியில் தேவிகுளம் டோல் பிளாசா என்ற பெயரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.

அந்த சுங்கச்சாவடி கடந்தாண்டு நவ.27ல் பயன்பாட்டுக்கு வர இருந்த நிலையில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு உள்பட பல்வேறு காரணங்களால் சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் சுங்கச்சாவடி நேற்று (அக்.4) காலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆந்திரா நிறுவனம் கட்டணம் வசூலிக்கின்றது. உள்ளூர் வாகனங்களுக்கு நேற்று கட்டணம் வசூலிக்கவில்லை. இன்று (அக்.5) முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement