இன்ஜி., கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்களூரின் மூன்று தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பதற்றம் உருவானது.

சில மாதங்களாக பெங்களூரின் தனியார் பள்ளிகள், ஹோட்டல்கள், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்கள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில், அவை பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது.

இந்நிலையில், பெங்களூரு, பசவனகுடியின் பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி, சதாசிவ நகரில் உள்ள எம்.எஸ்.ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லுாரிகளுக்கு நேற்று மதியம் 1:00 மணியளவில், இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லுாரி நிர்வாகத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். முன்னெச்சரிக்கையாக மூன்று கல்லுாரிகளின் மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் பரவியதால், மாணவர்களின் பெற்றோர், கல்லுாரிகள் முன் குவிந்தனர். தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். எந்த விதமான வெடிபொருட்களும் இருக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரிந்தது.

இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது. மிரட்டல் இ - மெயில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். இதுகுறித்து, ஹனுமந்தநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

- லோகேஷ் ஜகலாசர்துணை போலீஸ் கமிஷனர், தெற்கு மண்டலம்

Advertisement