மெட்ரோ ரயில் கட்டணம் 20 சதவீதம் உயர வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் கட்டணம் 20 சதவீதம் உயரும் வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவில் செல்வதற்காகவும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது ஒயிட்பீல்டு - செல்லகட்டா; நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக, 6 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில்கள், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் வருகின்றன.

மெட்ரோ ரயில்களின் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த, அதன் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இது பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கட்டணம் உயர்த்தப்பட உள்ளது உண்மை தான்' என, மெட்ரோ ரயில் நிர்வாகமே கூறி உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவுகான் கூறுகையில், ''மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க, மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், ஓய்வு நீதிபதிகள் தலைமையில் நாங்கள் குழு அமைத்துள்ளோம்.

அந்த குழு அறிக்கை தாக்கல் செய்த பின், எங்களின் செலவுகளை பார்த்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவோம். மூன்று மாதங்களில் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

'கட்டண உயர்வு தொடர்பாக தங்கள் கருத்துகள், ஆட்சேபனைகளை ffc@bmrc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் 21ம் தேதிக்குள் பயணியர் அனுப்பலாம்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisement