மைனர் பெண் கடத்திக்கொலை; மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

6

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மைனர் பெண், கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. கற்பழிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளதால், மீண்டும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான போராட்டங்கள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்புக்கு சென்ற மைனர் பெண் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

தெற்கு 24 பர்கானா மஹிஷாமரியை சேர்ந்த மைனர் பெண், பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என நேற்று இரவு எங்களிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த உடன், துரிதமாக செயல்பட்டு, விசாரணையை துவக்கினோம். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பல்வேறு காயங்களுடன் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடத்தி, 19 வயதான மொஸ்தாகின் சர்தார் என்பவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தை துவக்கினர். போலீஸ் வளாகத்திற்கு தீ வைக்கப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

மத்திய அமைச்சரும், மாநில பா.ஜ., தலைவருமான சுகந்தா மஜூம்தார் கூறுகையில், ''அந்த பெண் கடத்தப்பட்டு, கற்பழிப்புக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இல்லை. மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியாமல் மம்தா திணறி வருகிறார்,'' என்றார்.

போலீஸ் தரப்பில், 'உடற்கூராய்வு அறிக்கைக்காக, காத்திருக்கிறோம். அதுவரை கற்பழிப்பு என உறுதியாக சொல்ல முடியாது' என்றனர்.
இச்சம்பவம் மாநில அரசுக்கு தலைவலியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement