மழை காலத்தில் பயன்படுத்த 'வாக்கி - டாக்கி' : துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: ''மழை காலத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்த, 'வாக்கி - டாக்கி' வழங்கு வது குறித்து பரிசீலிக்க வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையையொட்டி எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

இதில், உதயநிதி பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை, இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளது. அதனால், மழை நீர் வடிகால் பணி, மின் வாரிய கேபிள்கள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என, ஏற்கனவே செய்து வரும் பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும்.

மழை காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல், வார்டு வாரியாக உள்ளன. அதனால், மோட்டார் பம்பு கள், படகுகள் போன்றவற்றை, ஒரே இடத்தில் வைக்காமல், அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே வழங்கி, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மழைநீர் அதிகம் தேங்கும் இடம் அருகிலேயே, சமையற்கூடங்கள் அமைத்தால், மக்களுக்கு உரிய நேரத்தில், நம்மால் உணவு வழங்க முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்க, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் அளவுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 1,000 பால் பாக்கெட்டுகள், ரொட்டி பாக்கெட்டுகள் என்ற அளவில் வழங்க, தயாராக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மழையின் போது, பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மொபைல் போன்களும் செயல்படவில்லை.

நிவாரண பணிகளை செய்ய, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்த, 'வாக்கி - டாக்கி'கள் வழங்கலாமா என்பது குறித்து ஆராய வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும். மழைநீர் சூழ்ந்துள்ள ஒட்டுமொத்த பகுதியும், இருளில் மூழ்கும் போது, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டாலும், ஜெனரேட்டர் வழியாக பிரதான சாலைகளிலும், இணைப்பு சாலைகளிலும், விளக்குகளை எரிய விடும்படி, பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிதிலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், பழமையான சுனாமி குடியிருப்புகள் போன்றவற்றில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement