மனித வேட்டை ஓநாய் அடித்துக்கொலை: கிராம மக்களிடம் வனத்துறை விசாரணை!

லக்னோ: உத்தரபிரதேசம் பஹ்ரைச் பகுதியில் ஓநாயின் சடலம் கண்டுடெடுக்கப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததால் கிராமத்தினரோ அல்லது வேறு சிலரோ கொன்றிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.



உ.பி.யில் உள்ளது பஹ்ரைச் மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல வாரங்களாகவே தூக்கத்தை தொலைத்துள்ளனர். அங்கு சுற்றித்திரியும் ஓநாய்கள் கூட்டம், கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமான மக்களை பீதியில் ஆழ்த்தியது. இதுவரை, ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன. ஓநாய்களை பிடிக்க, 'ஆப்பரேஷன் பேடியா' என்ற பெயரில் வனத்துறையினர் நடவடிக்கையை துவக்கினர்.



ஓநாய் சடலம்




தூங்கவிடாமல் உயிர் பலிகளை வாங்கிய ஓநாய்களை வனத்துறையினர் பிடித்துவிட்டதாக அண்மையில் அறிவித்து இருந்தனர். இருந்தாலும் சில இடங்களில் ஓநாய்கள் நடமாட்டம் இருக்கிறது என கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். ஏற்கனவே அச்சுறுத்தி வந்த 6 ஓநாய்களில், 5 ஓநாய்கள் வனத்துறையினர் கூண்டில் சிக்கிவிட்டன. ஒரு ஓநாய் மட்டும் டிமிக்கி கொடுத்து வந்தது. இந்நிலையில் இன்று (அக்.,06) பஹ்ரைச் பகுதியில் ஓநாயின் சடலம் கண்டுடெடுக்கப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததால் கிராமத்தினரோ அல்லது வேறு சிலரோ கொன்றிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். அச்சுறுத்தி வந்த 6 ஓநாய்கள் தொல்லை போய்விட்டதால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.


வனத்துறை விளக்கம்




பஹ்ரைச் கோட்ட வன அதிகாரி அஜித் பிரதாப் சிங் கூறுகையில், "ஓநாயை பிடிக்க பல நாட்களாக வனத்துறை அதிகாரிகள் முயன்று வந்தனர். ஒரு கிராமத்தில் விலங்கு உடல் கிடப்பதாக தகவல் கிடைத்ததும், உடனடியாக எங்கள் குழுவினருடன் அங்கு சென்று பார்த்தோம். அங்கு ஒரு இறந்த ஓநாய் சடலம் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்ததால் கிராமத்தினரோ அல்லது வேறு சிலரோ கொன்றிருக்கலாம். விசாரணைக்குப் பிறகுதான், நாங்கள் எதையும் கூற முடியும்'' என்றார்.

Advertisement