உலகக்கோப்பை வெற்றிக்கு பங்களித்த பண்ட்; ரோகித் ஷர்மா வெளியிட்ட ரகசியம்

1

இந்திய கிரிக்கெட் அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு ரிஷப் பண்ட் செய்த இந்த செயல் தான் திருப்புமுனையாக அமைந்தது என்று கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை தோற்கடித்து 2வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு சூர்யா குமார் யாதவ் பிடித்த அட்டகாசமான கேட்ச், விராட் கோலி விளாசிய அரைசதம், இறுதிகட்ட ஓவர்களை இந்திய பவுலர்கள் அற்புதமாக வீசியது என பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், யாருக்கும் தெரியாத ஒரு காரணத்தை கேப்டன் ரோகித் ஷர்மா தற்போது வெளியே சொல்லியுள்ளார்.


கபில் ஷர்மாவின் காமெடி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, அக்ஷர் படேல், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது, தென்னாப்ரிக்காவின் பேட்டிங் வேகத்தை தடுத்து, இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது விக்கெட் கீப்பர் பண்ட் செய்த செயல் தான் என்று கேப்டன் ரோகித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: தென்னாப்ரிக்கா அணி 30 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்தால் வெற்றி சூழலில், எங்களுக்கு ஒரு பிரேக் கிடைத்தது. சாமர்த்தியமாக யோசித்த விக்கெட் கீப்பர் பண்ட், மூட்டு வலிக்காக, காலில் டேப்பை மாட்டுவதற்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. இதுதான், அதிரடியாக ஆடி வந்த தென்னாப்ரிக்காவின் வேகத்தை குறைக்க காரணமாக இருந்தது. அதுவரையில் போட்டி தென்னாப்ரிக்காவுக்கு சாதகமாக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.


அப்போது, பீல்டிங் செட் செய்து கொண்டிருந்தேன். திடீரென பண்ட் மைதானத்தில் படுத்தார். உடனே பிஸியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு உள்ளே வந்து பண்ட்டின் காலில் டேப்பை போட்டுக் கொண்டிருந்தார். தென்னாப்ரிக்க வீரர் கிளாசனும் போட்டி எப்போது தொடங்கும் எனக் காத்துக் கொண்டிருந்தார். பண்ட்டின் இந்த செயலால் கிடைத்த பிரேக்கும், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, எனக் கூறினார்.

Advertisement