நெரிசலில் சிக்கி திணறியது சென்னை; வான் சாகசம் பார்க்க வந்தவர்கள் திண்டாட்டம்; 4 பேர் உயிரிழப்பு!

11

சென்னை: சென்னையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள், நிகழ்ச்சி முடிந்ததும் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர். முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரயில் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் அலைமோதினர். வெயில், நெரிசலில் சிக்கி தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


@1brசென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை இது படைத்தது.
விமானப் படையினரின் இந்த சாகச நிகழ்ச்சியைக் காண மெரினாவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்றனர். இவ்வாறு வந்த மக்கள் அனைவரும், நிகழ்ச்சி முடிந்ததும், மொத்தமாக வீடு திரும்ப முற்பட்டதால் சென்னை சாலைகளில் கூட்டம் அலைமோதியது.



மூவர் உயிரிழப்பு





சாலைகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் ஸ்தம்பித்தன. மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் மயக்கம் அடைந்தனர். இதில் வெயிலில் சிக்கிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், 56, மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், 34, என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தினேஷ் குமார், 37, சீனிவாசன் என்பவரும் இரவு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. நெரிசலில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து 3 மணி நேரமான பிறகும் சென்னை சாலைகளில் கூட்ட நெரிசல் குறைந்தபாடில்லை. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டு விட்டது.
சென்னையில் 21 ஆண்டுக்கு பிறகு வான் சாகச நிகழ்ச்சி நடந்தது; அதுவும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் திரண்டு வந்து விட்டனர். அரசு இதை முன் கூட்டியே எதிர்பார்த்து போதிய போக்குவரத்து வசதிகளை செய்திருக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோரின் குமுறலாக உள்ளது.

அது மட்டுமின்றி இந்த சாகசத்தை காண வந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ், ரயில் கிடைக்காமல், உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட மக்கள், சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவில் கூறியிருப்பதாவது:
சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளும், அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

குடிநீர், உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் அரசு பஸ்களை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன!.


இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். போலீசாருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதல்வராகத் தான் ஸ்டாலின் உள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement