தேனியில் இருந்து காலை நேரத்தில் 'கிழக்கே போகுமா ரயில்' பயணிகள் எதிர்பார்ப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் இருந்து பகல் நேரத்தில் மதுரை, பிற நகரங்களுக்கு ரயில் இயக்கப்படுவதில்லை.

மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன்கள் மூலம் வருவாய் அதிகரித்தாலும், போதிய ரயில்கள் இல்லாததால் கூடுதல் செலவு செய்து பயணிக்கும் சூழல் உள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் மீட்டர்கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பின் அகல ரயில்பாதை திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் தேனி - மதுரை இடையே ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு போடியில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. போடியில் இருந்து தினமும் மாலையில் மதுரைக்கும், வாரத்தில் மூன்று நாட்கள் சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

போடியில் இருந்து மதுரைக்கு காலை ரயில் இயக்க வேண்டும். சென்னை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்கள், பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

தற்போது இயக்கப்படும் தினசரி ரயில் மதுரையில் காலை 8:20க்கு புறப்பட்டு, போடிக்கு காலை 10:00 மணிக்கு வருகிறது.

இதே ரயில் போடியில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7:50 மணிக்கு செல்கிறது.

இந்த ரயில் இயங்கும் நேரத்தில் மறு மார்க்கத்தில் ரயில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement