உடனடி நீதி வழங்க மாய மந்திரக்கோல் எதுவும் இல்லை: ஐகோர்ட் கருத்து

18

கோல்கட்டா: ''உடனடி நீதி வழங்குவதற்கான மாய மந்திரக்கோல் ஏதும் நீதிமன்றத்திடம் இல்லை, '' என கோல்கட்டா ஐகோர்ட் கூறியுள்ளது.


மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இது தொடர்பாக 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது.


இந்த விவகாரம் தொடர்பாக கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி திரிதங்கர் கோஷ் கூறியதாவது: தாங்கள் குற்றவாளி என கருதுபவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது உச்சநீதிமன்றமும், மாநில ஐகோர்ட்களும் சந்திக்கும் பெரிய பிரச்னையாகும்.


உடனடியாக நீதி வழங்குவதற்கான மாய மந்திரக்கோல் ஏதும் நீதிமன்றங்களிடம் இல்லை. நீதி என்பது 'ஸ்டெப் பை ஸ்டெப் ' முறையிலான நடைமுறையாகும். தங்கள் முன்னர் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான் நீதிமன்றங்கள் செயல்படும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement