பாகிஸ்தானில் தொடரும் போராட்டம்: ஜெய்சங்கருக்கு இம்ரான் கட்சி அழைப்பு

1

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரது கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அவரது கட்சி நிர்வாகி ஒருவர், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அது கட்சியின் கருத்து அல்ல என அக்கட்சி சேர்மன் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) என்ற கட்சி தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி அவரது கட்சி தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


நமது வெளியுறுவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, தங்களது போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பிடிஐ கட்சியை சேர்ந்தவரும், கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வரின் ஆலோசகரான முகமது அலி சயீப் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தார். இது அங்கு விவாதப் பொருளானது.

இதனையடுத்து அக்கட்சியின் சேர்மன் கோகர் அலி கான் கூறியதாவது: பி.டி.ஐ., கட்சியினர் நடத்தும் போராட்டத்திற்கு இந்தியாவை சேர்ந்தவர் உட்பட எந்த வெளிநாட்டவரையும் அழைக்கவில்லை. எங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டினர் யாரும் தலையிடக்கூடாது. முகமது அலி சயீப் கூறியது கட்சியின் கருத்து கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement