ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை கோட்டக்குப்பத்தில் நோயாளிகள் அவதி

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள 27 வார்டுகளைச் சேர்ந்தவர்கள், சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் அதிகளவில் பயனடைகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர், 3 செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள், மருந்தாளுநர் உட்பட 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால் இங்கு ஒரே ஒரு பெண் டாக்டர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் வெகு நேரமாக நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டாலும், இரவு நேரத்தில் டாக்டர் பணியில் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

டாக்டர் இல்லாத நேரங்களில் செவிலியர்களே மருந்து, மாத்திரை வழங்கும் நிலை உள்ளது.

இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டபோது, 'மாவட்டம் முழுதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பற்றாக்குறை உள்ளது. நாங்களும் மாவட்ட அதிகாரிகளிடம் கூடுதல் டாக்டர் கேட்டு கோரிக்கை வைத்து விட்டோம். ஆனால் இதுவரை டாக்டர்களை நியமிக்கவில்லை' என்றனர்.

Advertisement