தற்காலிக அருங்காட்சியக பணிகள் தீவிரம்: விழுப்புரத்தில் துறை அதிகாரி ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு அருங்காட்சியகம், தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சிக்கோட்டை, திருவக்கரை தேசிய கல்மர பூங்கா மற்றும் சிறப்புமிக்க வரலாற்று பழமையான கோவில்கள் குறித்த கல்வெட்டுகள் அமைந்துள்ளன. மாவட்டத்தில், பல இடங்களில் கிடைத்த தொல்லியல் சின்னங்களைப் பாதுக்காக்க, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 2022ம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடா்ந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான இடத்தில் 2,000 சதுர மீட்டர் இடத்தில், 5.60 கோடி ரூபாய் செலவில், அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான அரசு உத்தரவு, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வெளியானது.

இதற்கிடையே, அருங்காட்சியகம் அமைத்திட, 2 ஏக்கர் இடம் தேவை என்ற புதிய கோரிக்கை, தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை மூலம், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி, கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், கோலியனுார் அருகே உள்ள பனங்குப்பம் கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கார் இடம், மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த இடத்தை அரசின் அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அரவிந்த், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, பனங்குப்பம் கிராமத்தில் உள்ள இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் பெயருக்கு நில மாற்றம் செய்யலாம் என கலெக்டர், 2023ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி நில நிர்வாக ஆணையருக்குப் பரிந்துரை செய்தார்.

இதற்கிடையே அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் அருங்காட்சியகத்தை துவங்க, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டடம், மாம்பழப்பட்டு சாலையில் டி.ஐ.ஜி., அலுவலகம் செயல்பட்டு வந்த நகராட்சி கட்டடம், புதுச்சேரி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூட கட்டடம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை இடம் ஆகியவற்றை, கடந்த வாரம், கடலுார் அருங்காட்சியக காப்பாளர் ஜெயரத்னா பார்வையிட்டார்.

இது குறித்து அறிக்கையை, அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்காலிக, அருங்காட்சியக பணிகளையாவது, விரைந்து செயல்படுத்திட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement