கிரைம் செய்திகள்...

சுவர் இடித்த தகராறில் ஒருவர் கைது



விழுப்புரம். ஆசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன், 40; கூலித் தொழிலாளி. மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமிபதி சக்தி. இவர் வெளியூர் சென்றதால் இவரது வீட்டை முரளிதரனை பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றிருந்தார். லட்சுமிபதிசக்தியின் உறவினரான விஸ்வநாதன், 45; என்பவர், லட்சுமிபதிசக்தியின் வீட்டிற்குள் நுழைந்து, முன்பக்க சுவரை இடித்தார். தட்டிக்கேட்ட முரளிதரனை தாக்கியுள்ளார்.

புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.

ஆசிரியை மாயம்: போலீஸ் விசாரணை



விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகள் விஜயசாந்தி, 23; உளுந்துார் பேட்டையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

கடந்த 4ம் தேதி வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கணவர் மாயம்: மனைவி புகார்



கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அண்ணா துரை, 54; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டார். கடந்த மாதம் 20ம் தேதி அண்ணாதுரை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது மனைவி அம்சவேணி, அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது



கோட்டக்குப்பம் போலீசார் இ.சி.ஆரில் மஞ்சக்குப்பம் குளக்கரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் பையில், 26 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திசென்றது தெரிய வந்தது.

விசாரணையில் செய்யூர் அடுத்த இல்லிடு கிராமத்தைச் சேர்ந்த சம்மந்தமூர்த்தி, 39; ஏழுமலை, 65; என்பது தெரிந்தது. உடன், இருவரையும் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அ.தி.மு.க., பேனரை கிழித்தவர் கைது



வல்லம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் அ.தி.மு.க., பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை வல்லம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், 38; மற்றும் சிலர் சேதப்படுத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அறிவழகனை பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தனர். மேலும், இச்சம்பவத்தை கண்டித்து நேற்று காலை 11:30 மணியளவில் அ.தி.மு.க.,வினர் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின், ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து அறிவழகனை கைது செய்தனர்.

Advertisement