பயன்பாடின்றி பாழாகும் பயணியர் நிழற்கூடம்

விழுப்புரம்: விழுப்புரம் திருச்சி சாலையில் பயணிகள் நிழற்கூடம் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில், வழுதரெட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, பஸ் நிறுத்தத்தில் 2019-20ம் ஆண்டு எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது.

அந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்ததால், நிழற்கூடத்தை கழற்றி, சாலையோரமாக மாற்றி கட்டமைத்தனர்.

அப்போது அதனை முழுதும் பொருத்தாமல் விட்டதால், மீதமிருந்த இரும்பு கூரைகளை சிலர் எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும், நிழற் கூடத்தின் இரும்பிலான இருக்கைகள் பொருத்தாமல், பெட்ரோல் பங்க் ஓரமாக கிடப்பில் போட்டு வீணாகி வருகிறது.

பல குடியிருப்பு பகுதிகள், மகளிர் கல்லுாரி முன் அமைந்துள்ள இந்த நிழற் கூடத்திற்கு ஓரமாக எப்போதும், கனரக லாரிகள் நிறுத்தி ஆக்கிரமித்துக் கொள்வதால், அதனை பயணிகள் பயன்படுத்துவதில்லை. லாரிகள் நிறுத்தப்படுவதை தடுத்து, பயணிகள் நிழற்குடையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement