தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெறும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

முதுமையில் வறுமை தமிழ்த் தொண்டர்களை தாக்காத வகையில், தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபட மாதம் தோறும் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகையை தற்போது வரை 1,334 முதிர்ந்த தமிழறிஞர்கள் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் இந்தாண்டு பயன்பெற வயது முதிர்ந்த தமிழறிஞரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதில், விண்ணப்பிக்க கடந்த ஜனவரி 1ம் தேதியில் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் இணையவழி மூலம் பெற்ற வருவாய் சான்று இணைக்க வேண்டும்.

தமிழ்ப்பணி ஆற்றியதற்கான விபர குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றுவதற்கான பரிந்துரை சான்று தமிழ் அறிஞர்களிடம் இருந்து பெற்று விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பத்தை மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை, உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாக பெறலாம்.

அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் 25ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement