பணம் கேட்டு கடத்தப்பட்ட கட்டட பொறியாளர் மீட்பு

மதுரை: மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் மணிமுத்து, 50, கட்டட பொறியாளர். இவரது நண்பர் செல்லுார் திவாகர், 35, பலசரக்கு கடை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டது.

இவருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் ஏற்பாடு செய்து தருவதாக மணிமுத்து கூறினார். இதை நம்பிய திவாகரிடம், கடனுக்கான நடைமுறை செலவு தொகையாக மணிமுத்து, 1.50 லட்சம் ரூபாய் பெற்றார்.

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகும் கடன் பெற்றுத் தராததால், திவாகர் பணத்தை திருப்பி கேட்டார்.

சாக்கு போக்கு சொல்லி மணிமுத்து சமாளிக்கவே, தன்னை ஏமாற்றுவதாக கருதி, நண்பர்கள் உதவியுடன் மணிமுத்துவை கடத்தி பணத்தை பெற திட்டமிட்டார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு மாட்டுத்தாவணியில் மணிமுத்துவை காரில் கடத்தினர். அவரது மொபைல் போனில் இருந்து மணிமுத்துவின் மனைவியிடம் பேசி, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.

இதுகுறித்து போலீசிற்கு அவர் தகவல் தெரிவித்தார்.

மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ., தியாகப்ரியன் தலைமையிலான போலீசார், சில மணி நேர தேடுதலுக்கு பின், திருப்பாலை பகுதியில் இருந்த கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தனர்; மணிமுத்துவை மீட்டனர்.

கடத்தியவர்கள் திவாகர்,அவரது சகோதரர் தாமரை, 34, நண்பர்கள் ஆரப்பாளையம் விக்னேஷ், 32, எல்லீஸ்நகர் ராஜா, 39, எனத் தெரிந்தது.

அவர்களை கைது செய்து, மணிமுத்துவை மீட்ட போலீசாரை, கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

Advertisement