முகமூடி கொள்ளையன் சொத்துக்கள் முடக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கோவை மாவட்டம், துடியலுார், சிங்காநல்லுார், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, செக்கானுாரணி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உட்பட பல இடங்களில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் முகமூடி அணிந்த மர்ம நபர், தனி ஒருவனாக நகைகளை கொள்ளை அடித்தார்.

கோவை, மதுரை, விருதுநகர் மாவட்ட தனிப்படை போலீசாரும், அந்த மர்ம நபரை தேடி வந்தனர். ராஜபாளையத்தில் பிடிபட்ட பெரியகுளத்தை சேர்ந்த இருவரை தனிப்படையினர் விசாரித்தனர்.

அவர்கள் அளித்த தகவலில், முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டது, மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரிந்தது.

மேலும், கொள்ளையில் கிடைத்த பணத்தில், ராஜபாளையம் மில்லுக்கு சொந்தமான இடத்தையும், புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் சில இடங்களையும் அவர் வாங்கியது தெரிந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன், கோவை தனிப்படை போலீசார், முகமூடி கொள்ளையில் ஈடுபட்ட மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1,000 சவரன் நகைகளை கொள்ளையடித்திருக்கலாம் என தெரிந்தது.

அவற்றில், குறிப்பிட்ட அளவு நகைகளை கைப்பற்றிய போலீசார், ராஜபாளையத்தில் இரு இடங்களில் மூர்த்திக்கு சொந்தமான அசையா சொத்துக்களை கோர்ட் மூலம் முடக்கியுள்ளனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடக்கிறது.

மேலும், பல சொத்துக்களை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement