ஜல்லி கொட்டி ஓராண்டாச்சு தார்சாலை போடுவது எப்போது?

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சியில் மாமண்டூர் கிராமம், நாவல்குப்பம் கிராமம், காலனி மற்றும் எஸ்.ஆர்.கண்டிகை ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் எஸ்.ஆர்.கண்டிகையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மருத்துவ உதவிக்கு வேளகாபுரம் சென்று அங்கிருந்து ஊத்துக்கோட்டை செல்கின்றனர்.

இதில் எஸ்.ஆர்.கண்டிகையில் இருந்து வேளகாபுரம் காலனி இரண்டு கி.மீட்டர் துாரம் உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைக்காலங்களில் மழைநீர் சேர்ந்து குளம்போல் தேங்கி விடும். இதனால் மாணவர்கள், அவசரத் தேவைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தில் 2022- -23ம் ஆண்டு , 1.2 கி.மீட்டர் துாரத்திற்கு தார்சாலை அமைக்க, 74.78 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான டெண்டர் விடப்பட்டு கடந்த ஒரு ஆண்டிற்கு முன் பணி துவக்கப்பட்டது. ஜல்லிகள் கொட்டி சமன்படுத்திய பின் பணி நிறுத்தப்பட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் அப்பகுதி மக்கள் ஜல்லிக்கற்கள் மீது நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எஸ்.ஆர்.கண்டிகை சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement