ரியல் எஸ்டேட் ஆணைய பதிவில் தரச்சான்று கட்டாயம்

சென்னை:வீடு வாங்குவோருக்கு கட்டடத்தின் உறுதி தொடர்பான உத்தரவாதம் கிடைக்க, கட்டுமான நிறுவனங்கள் தரச்சான்று தாக்கல் செய்வதற்கு, ரியல் எஸ்டேட் சட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில், 5,381 சதுரடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும் கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். பதிவு செய்யும் போது, கட்டட அனுமதி, நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

விதிமீறல் உள்ளதா, அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு உள்ளனவா, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வீடு ஒப்படைக்கப்படுகிறதா என்பது தொடர்பான புகார்கள் குறித்து, ரியல் எஸ்டேட் ஆணையம் விசாரிக்கிறது. இதில், கட்டடத்தின் தரச்சான்று கேட்கப்படுவது இல்லை. ஆனால், சமீப காலமாக கட்டடங்களின் தரம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை, மக்கள் சந்தித்து வருகின்றனர்.

சில வழக்குகளில், கட்டடத்தின் தரம் சார்ந்த புகார் வரும் போது, அதையும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில், மஹாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, கட்டடங்களை பதிவு செய்யும் போது, கட்டுமான நிறுவனங்கள் தரத்தை உறுதி செய்வதற்கான தரச்சான்றையும் தாக்கல் செய்வது கட்டாயம் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது, வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:

கட்டட அனுமதி, நில உரிமை, கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதற்கான கால வரம்பு, பரப்பளவு போன்ற விஷயங்களில், ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவுகள் பிறப்பிக்கிறது.

மஹாராஷ்டிராவை பின்பற்றி, தமிழக ரியல் எஸ்டேட் ஆணையமும் கட்டட தரச்சான்று தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

தமிழகத்தில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதற்கான பணிகளை துணை ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்கின்றன.

இவ்வாறு வரும் ஒப்பந்ததாரர்கள், தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால், கட்டடங்கள் இடிந்து விழும் நிலை ஏற்படுகிறது.

எனவே, தரச்சான்றை கட்டாயமாக்க, தமிழக அரசும், ரியல் எஸ்டேட் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement